1056
முறைப்படி நினது முன்புநின் றேத்தி 

முன்னிய பின்னர்உண் ணாமல் 
சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் 

சென்றுநின் முன்னர்உற் றதனால் 
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் 

கருத்தனே ஒருத்தனே மிகுசீர் 
தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 ஆடலமுதப் பத்து 
திருவொற்றியூரும் திருத்தில்லையும்

எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
() எழுசீர் - தொவே , எண்சீர் - சமுக் ஆபா 
1057
சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே 

செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன் 
வந்து நின்னடிக் காட்செய என்றால் 

வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே 
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன் 

இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே 
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே    
1058
மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா 

வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால் 
தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே 

திருவ ருட்குநான் சேயனும் ஆனேன் 
காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம் 

கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன் 
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே   
1059
உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த 

உள்ளம் என்வசம் உற்றதின் றேனும் 
என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல் 

இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ 
முன்னை வல்வினை முடித்திடில் சிவனே 

மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ 
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே    
1060
என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா 

தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான் 
உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல் 

ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல் 
இன்ன தென்றறி யாமல இருளில் 

இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே 
அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே