1071
யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான் 

எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன் 
தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன் 

செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன் 
போது போகின்ற தன்றிஎன் மாயப் 

புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண் 
சீத வார்பொழில் ஒற்றியம் பரனே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே   
1072
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள் 

சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா 
நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை 

நாடி நல்லருள் நல்கிடா திருந்தால் 
ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ 

தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத் 
தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே   
1073
ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும் 

ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக் 
காட்டு கின்றவான் கடலிடை எழுந்த 

காள முண்டஅக் கருணையை உலகில் 
நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய 

நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும் 
தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே   
1074
உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை 

ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ 
செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே 

செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி 
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை 

மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே 
செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே   
1075
வாடு கின்றனன் என்றனை இன்னும் 

வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப் 
பாடு கின்றனன் பாவியேன் என்னைப் 

பாது காப்பதுன் பரம்அது கண்டாய் 
தேடு கின்றமால் நான்முகன் முதலாம் 

தேவர் யாவரும் தெரிவரும் பொருளே 
சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே