1081
ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின் 

றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில் 
தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக் 

கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே 
பூறு வங்கொளும் ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே    
1082
கந்த மும்மல ரும்என நின்றாய் 

கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால் 
சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
எந்த நல்வழி யால்உனை அடைவேன் 

யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண் 
புந்தி இன்பமே ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே   
1083
அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி 
அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த் 
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
ஒல்லை இங்குவா என்றருள் புரியா 

தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ 
புல்லர் மேவிடா ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே   
1084
ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும் 

நாய்க ளுக்கெலாம் நாயர சானேன் 
சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன் 

இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே 
போல என்றுரை யாஒற்றி அரசே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே    
1085
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது 

சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது 
சித்தம் என்னள வன்றது சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன் 

நித்த னேஅது நீஅறி யாயோ 
புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே