1091
உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா 

துறைந்தது நாடொறும் அடியேன் 
கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் 

கண்டுகண் டுளமது நெகவே 
விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே 

விடத்தினும் கொடியன்நான் அன்றோ 
அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே 

அலைகின்றேன் அறிந்திருந் தனையே    
1092
தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் 

தள்ளுதல் வழக்கல என்பார் 
வினையனேன் பிழையை வினையிலி நீதான் 

விவகரித் தெண்ணுதல் அழகோ 
உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் 

உழன்றிடுந் தேவரை மதியேன் 
எனையலா துனக்கிங் காளிலை யோஉண்

டென்னினும் ஏன்றுகொண் டருளே   
1093
ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் 

இருக்கினும் இறக்கினும் பொதுவுள் 
ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் 

உரைக்கும்மால் அயன்முதல் தேவர் 
நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் 

நாஎழா துண்மையீ திதற்குச் 
சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் 

சார்ந்தநின் சரண்இரண் டன்றே    
1094
சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் 

தரித்திலை தாழ்த்தனை அடியேன் 
கரணவா தனையும் கந்தவா தனையும் 

கலங்கிடக் கபமிழுத் துந்தும் 
மரணவா தனைக்கென் செய்குவம் என்றே 

வருந்துகின் றனன்மனம் மாழாந் 
தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே 

அடியனை ஆள்வதுன் கடனே    
1095
கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் 

கடவுளே கடவுளர் கோவே 
மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் 

வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ் 
உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்த

உடம்புகொண் டுழல்வனோஎன்று 
நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் 

நான்செயும் வகைஎது நவிலே