1101
வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் 
காதம் ஓடும் கடியனை ஆள்வது 
நீத மோஅன்றி நேரும்அ நீதமோ 
ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே   
1102
தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக் 
கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே 
நலத்த னேஒற்றி நாயக னேஇந்த 
மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே   
1103
மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம் 
ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன் 
ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக் 
கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே    
1104
உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான் 
செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே 
பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம் 
எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே    
1105
எந்தை யேதில்லை எம்இறை யேகுகன் 
தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன் 
முந்தை ஏழ்பவ மூடம யக்கறச் 
சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே