1106
திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத் 
திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப் 
பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு 
வருந்த என்தனை வைத்தத ழகதோ   
1107
வைத்த நின்அருள் வாழிய வாழிய 
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே 
உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப் 
பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே    
1108
போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச் 
சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத் 
தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை 
ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே   
டீயஉம--------------------------------------------------------------------------------


 இரங்கல் விண்ணப்பம்
திருவொற்றியூர் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1109
பற்று நோக்கிய பாவியேன் தனக்குப் 

பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே 
மற்று நோக்கிய வல்வினை அதனால் 

வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் 
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் 

அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை 
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே    
1110
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் 

கோடி கோடியாம் குணப்பழு துடையேன் 
கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன் 

கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன் 
அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே 

ஐய ஐயநான் அலறிடு கின்றேன் 
ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே