1111
காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில் 

கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச் 
சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச் 

சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால் 
ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி 

ஏட நீகடை என்றிடில் அவர்முன் 
ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே   
1112
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் 

வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம் 
கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில் 

காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன் 
எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா 

தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால் 
உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ 

ஒற்றி மேவிய உலகுடை யோனே   
1113
வெருட்சி யேதரும் மலஇரா இன்னும் 

விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம் 
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால் 

வருவ தற்கொரு வழியும்இங் கறியேன் 
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான் 

சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால் 
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே   
1114
யாதும் உன்செய லாம்என அறிந்தும் 

ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத் 
தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம் 

தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக் 
கோது செய்மலக் கோட்டையைக் காவல் 

கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ 
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே 

ஒற்றி மேவிய உலகுடை யோனே    
1115
பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால் 

பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன் 
இந்த மட்டில்நான் உழன்றதே அமையும் 

ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன் 
அந்த மட்டினில் இருத்தியோ அன்றி 

அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை 
உந்த மட்டினால் தருதியோ உரையாய் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே