1121
இலைஎ னாதணு வளவும்ஒன் றீய 

எண்ணு கின்றிலை என்பெறு வாயோ 
கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே 

கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய் 
தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான் 

தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில் 
புலையி னார்கள்பால் போதியோ வீணில் 

போகப் போகஇப் போக்கினில் அழிந்தே    
1122
அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும் 

ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே 
கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல் 

கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே 
மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே 

முன்னு றாவகை என்னுறும் உன்னால் 
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் 

என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே   
1123
தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத் 

தேனை மெய்அருள் திருவினை அடியர் 
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை 

உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர் 
கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக் 

கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம் 
மானை அம்பல வாணனை நினையாய் 
வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே    
1124
இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ 

ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான் 
முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை 

முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண் 
என்னை நீஎனக் குறுதுணை அந்தோ 

என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில் 
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் 

மற்று நாம்பிற வாவகை வருமே   
1125
பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு 

பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே 
இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே 

இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் 
மறந்து விட்டனை நெஞ்சமே நீதான் 

மதியி லாய்அது மறந்திலன் எளியேன் 
துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச் 

சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே