1141
முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் 

முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன் 
என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் 

எய்தில னேல்உயிர்க் குறுதிப் 
பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் 

பேதையில் பேதைநான் அன்றோ 
கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே 

கடவுளே கருணையங் கடலே   
1142
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் 

மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் 
எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் 

இல்லிடை மல்லிடு கின்றேன் 
விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது 

மெல்அடிக் கடிமைசெய் வேனோ 
கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே 

கடவுளே கருணையங் கடலே    
1143
அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் 

ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல் 
இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி 

ஏழைகள் உண்டுகொல் இலைகாண் 
தளர்விலா துனது திருவடி எனும்பொற் 

றாமரைக் கணியனா குவனோ 
களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே 

கனந்தரும் கருணையங் கடலே    
1144
ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் 

நண்ணிலேன் புண்ணியம் அறியேன் 
ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் 

எவ்வணம் உய்குவ தறியேன் 
வானநா டவரும் பெறற்கரு நினது 

மலரடித் தொழும்புசெய் வேனோ 
கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் 

கடவுளே கருணையங் கடலே    
1145
ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே 

நன்கறிந் துன்திரு அருளாம் 
சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் 

சிறியனும் பெறுகுவ தேயோ 
நீலமா மிடற்றுப் பவளமா மலையே 

நின்மல ஆனந்த நிலையே 
காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் 

கடவுளே கருணையங் கடலே