1161
கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன் 
அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும் 
நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி 
எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ    
1162
நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில் 
நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும் 
தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப் 
பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ    
1163
வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே 
ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே 
தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது 
ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ    
1164
தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம் 
உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே 
சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப் 
பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ    
1165
உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே 
மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது 
தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண் 
எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ