1166
நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம் 
பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே 
மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே 
இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ    
1167
மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக் 
கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்உடையாய் 
சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட் 
பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ    
1168
சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர் 
சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே 
நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும் 
பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ    
1169
தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே 
ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே 
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக் 
கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ    
1170
விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே 
மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே 
நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப் 
பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 நாடக விண்ணப்பம்
திருவொற்றியூர் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்