1176
பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப் 
பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ 
மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல் 
வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ 
உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை 
ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர் 
நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர் 
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே    
1177
வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் 
வண்கை உள்ளவர் மற்றதுபோலக் 
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் 
கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை 
மலிய உண்டிட வருகின்றேன் வருமுன் 
மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ 
நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர் 
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே    
1178
பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப் 
புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல் 
உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில் 
ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன் 
ஐய நும்மடிக் காட்செயல் உடையேன் 
ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ 
நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர் 
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே    
1179
தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச் 
சமைவர் என்பது சற்றும்இன் றுலகில் 
எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில் 
இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன் 
பந்த மேலிட என்பரி தாபம் 
பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர் 
நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர் 
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே    
1180
கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர் 
கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண் 
செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன் 
சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ 
பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப் 
பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே 
நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர் 
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே