1186
தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத் 

தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன் 
ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர் 

ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள் 
ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல் 

உய்கி லேன்இஃ தும்பதம் காண்க 
சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே    
1187
புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர் 

பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப் 
பதிய வைத்தனன் ஆயினும் அந்தப் 

பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே 
முதியன் அல்லன்யான் எப்பணி விடையும் 

முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் 
துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே    
1188
ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக் 

குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல் 
புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம் 

போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள் 
பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன் 

பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர் 
தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே    
1189
பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப் 

பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும் 
இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல் 

இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர் 
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் 

சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண் 
துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே    
1190
ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க் 

கமுது வேண்டிமா லக்கடல் கடைய 
ஓல வௌ;விடம் வரில்அதை நீயே 

உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன் 
சாலம் செய்வது தகைஅன்று தருமத் 

தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும் 
சூல பாணியீர் திருவொற்றி நகரீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே