1206
காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த 
பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த 
நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட 
மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே    
1207
மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு 
முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான் 
சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே 
என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே    
1208
ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம் 
போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே 
ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற 
சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே    
1209
சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே 
கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே 
நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே 
செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே    
1210
சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே 
நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம் 
தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே 
பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே