1216
நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன் 
தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச் 
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம் 
தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே    
1217
வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன் 
அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே 
மன்னே மணியே மலையாள் மகிழ்உனது 
பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே    
1218
நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன் 
எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர் 
கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே 
பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே    
1219
தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன் 
இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே 
அவ்வண்ண மான அரசே அமுதேநின் 
செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே    
1220
அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன் 
சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல் 
வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய 
செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே