1226
எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத் 
தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே 
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன் 
நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ    
1227
உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே 
கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை 
நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும் 
எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ    
1228
கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த 
தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே 
தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப் 
பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ    
1229
முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம் 
தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே 
சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே 
எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ    
1230
வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே 
கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே 
நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர் 
தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ