1236
கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல் 
கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும் 
நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த 
நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய் 
மலம்இ லாதநல் வழியிடை நடப்போர் 
மனத்துள் மேவிய மாமணிச் சுடரே 
சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1237
போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல் 
புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச் 
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் 
சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய் 
கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள் 
குமரன் தந்தையே கொடியதீ வினையைத் 
தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1238
ஓட உன்னியே உறங்குகின் றவன்போல் 
ஓங்கும் உத்தம உன்அருட் கடலில் 
ஆட உன்னியே மங்கையர் மயலில் 
அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய் 
நாட உன்னியே மால்அயன் ஏங்க 
நாயி னேன்உளம் நண்ணிய பொருளே 
தேட உன்னிய மாதவ முனிவர் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1239
முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும் 
மூடன் என்னநின் மொய்கழல் பதமேத் 
துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன் 
துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ 
நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே 
நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே 
சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1240
கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல் 
காமம் உந்திய நாமநெஞ் சகத்தால் 
எல்லை உந்திய பவக்கடல் கடப்பான் 
எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ 
அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே 
அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே 
தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே