1246
மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம் 
சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே 
வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே 
நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே    
1247
நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால் 
ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன் 
ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த 
தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே    
1248
நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம் 
சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம் 
விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள 
மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே    
1249
மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால் 
நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம் 
கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி 
வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே    
1250
வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால் 
வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள் 
தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய் 
சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே