1256
இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை 
வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை 
எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை 
அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    
1257
ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம் 
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச் 
சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ 
ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    
1258
பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும் 
கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை 
மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன் 
ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    
1259
இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே 
விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச் 
செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன் 
அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    
1260
புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத் 
தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை 
விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம் 
அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே