1266
அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த 
விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே 
வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள் 
மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ    
1267
மாலும் நான்குவ தனனும் மாமறை 
நாலும் நாடரு நம்பர னேஎவ 
ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின் 
ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே    
1268
தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர் 
மூவர் ஆயினும் முக்கண நின்அருள் 
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ 
ஓவு றாதஉ டற்பிணி தன்னையே    
1269
வைய நாயக வானவர் நாயக 
தையல் நாயகி சார்ந்திடும் நாயக 
உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல் 
வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே    
1270
கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர் 
எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே 
இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல் 
தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே