1276
சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே 
நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு 
ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து 
மற்றிசைப்ப தெல்லாம் வரும்   
1277
வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே 
ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப் 
போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய் 
ஆவான் திருவடிஅல் லால்    
1278
அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக் 
கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த 
விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என் 
கண்மணியை நெஞ்சே கருது    
1279
கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள் 
மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும் 
என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே 
என்அருமை அப்பாவே என்று    
1280
என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர் 
ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும் 
ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப் 
பற்றிநிற்பை யாகில் பரிந்து