1281
பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் 
எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து 
விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர் 
புடையானை நெஞ்சமே போற்று    
1282
போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை 
ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர் 
அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச் 
செவ்வண்ணத் தானைத் தெரிந்து    
1283
தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன் 
விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக் 
கண்ணானை மாலயனும் காணப் படாதானை 
எண்ணாரை எண்ணாதே என்று    
1284
என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே 
ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற 
செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல் 
நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்    
1285
நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன் 
தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும் 
தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம் 
பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு