1286
பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத் 
தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள் 
உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப் 
பெற்றமர்தி நெஞ்சே பெரிது    
1287
பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை 
அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத் 
தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை 
மேலானை நெஞ்சே விரும்பு    
1288
விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள் 
அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி 
நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச் 
சீர்கொண்டு நெஞ்சே திகழ்   
1289
திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர் 
புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற 
ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை 
வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு    
1290
வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர் 
தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை 
ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால் 
சென்றுதொழு கண்டாய் தினம்