1291
தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர் 
மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும் 
வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப் 
போத மலரைநெஞ்சே போற்று    
1292
போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் 
ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி 
கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம் 
கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு   
1293
கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில் 
ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம் 
உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர் 
நள்ளவனை நெஞ்சமே நாடு   
1294
நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர் 
கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர் 
சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் 
உத்தமனை நெஞ்சமே ஓது    
1295
ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது 
தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி 
ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப் 
பாதம் பிடிக்கும் பயன்