1296
பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ 
டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார் 
உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ் 
உள்ளத் தவரை உறும்    
1297
தவராயி னும்தேவர் தாமாயி னும்மற் 
றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத 
நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ் 
எந்தை அடிவணங்கா ரேல்    
1298
ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய 
ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல 
மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும் 
பணிகண்டாய் அன்னோன் பதம்    
1299
பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும் 
சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என் 
நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே 
தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான்    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 தனிமைக் கிரங்கல் 
திருவொற்றியூர் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1300
ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த 
அயன்முன் ஆகிய ஐவரை அளித்து 
நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த 
நித்த நீஎனும் நிச்சயம் அதனைத் 
தாக்க எண்ணியே தாமதப் பாவி 
தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே 
ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும் 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே