1301
கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல் 
காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப் 
பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும் 
பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண் 
குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக் 
கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம் 
உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன் 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
1302
இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி 
இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின் 
சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும் 
துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக் 
குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும் 
கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே 
உமைக்கு நல்வரம் உதவிய தேவே 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
1303
சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும் 
சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய் 
நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண் 
நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே 
என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம் 
எந்தை யேஎனை எழுமையும் காத்த 
உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன் 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
1304
கோடி நாவினும் கூறிட அடங்காக் 
கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை 
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர் 
நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே 
வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா 
வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும் 
ஊடி னாலும்மெய் அடியரை இகவா 
ஒற்றி மேவிய உத்தமப் பொருளே   
1305
அன்ப தென்பதைக் கனவினும் காணேன் 
ஆடு கின்றனன் அன்பரைப் போல 
வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன் 
வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன் 
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத் 
தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே 
ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய் 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே