1306
முன்னை நான்செய்த வல்வினை இரண்டின் 
முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில் 
என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி 
இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால் 
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப் 
பேச என்னுளம் கூசுகின் றதுகாண் 
உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன் 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
1307
கண்ணி லான்சுடர் காணிய விழைந்த 
கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத் 
தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின் 
சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் 
பண்ணி லாவிய பாடலந் தொடைநின் 
பாத பங்கயம் பதிவுறப் புனைவோர் 
உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
1308
உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம் 
உண்மை அன்றென உணர்த்தியும் எனது 
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப் 
பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண் 
வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ 
வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ 
ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
1309
நையு மாறெனைக் காமமா திகள்தாம் 
நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான் 
செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய் 
திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே 
வையு மாறிலா வண்கையர் உளத்தின் 
மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே 
உய்யு மாறருள் அம்பலத் தமுதே 
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 கருணை பெறா திரங்கல் 
பொது 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1310
நன்றி ஒன்றிய நின்னடி யவர்க்கே 
நானும் இங்கொரு நாயடி யவன்காண் 
குன்றின் ஒன்றிய இடர்மிக உடையேன் 
குற்றம் நீக்கும்நல் குணமிலேன் எனினும் 
என்றின் ஒன்றிய சிவபரஞ் சுடரே 
இன்ப வாரியே என்னுயிர்த் துணையே 
ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே 
உனைஅ லால்எனை உடையவர் எவரே