1311
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் 
தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே 
ஏது செய்தன னேனும்என் தன்னை 
ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே 
ஈது செய்தனை என்னைவிட் டுலகில் 
இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன் 
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1312
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் 
சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன் 
மன்ற நான்இவண் இவ்வகை ஆனால் 
வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ 
என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன் 
எண்ணம் எப்படி அப்படி இசைக 
உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1313
மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன் 
வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம் 
ஐய ஐயவோ கண்டிடா தவர்போல் 
அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ 
செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே 
தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி 
உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1314
மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால் 
வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம் 
எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற் 
றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன் 
அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால் 
அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன் 
உண்ண நல்அமு தனையஎம் பெருமான் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1315
அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே 
அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன் 
என்னை இப்படி இடர்கொள விடுத்தால் 
என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன் 
பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப் 
போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ 
உன்னை எப்படி ஆயினும் மறவேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே