1316
நீலம் இட்டகண் மடவியர் மயக்கால் 
நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய் 
ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன் 
நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை 
ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும் 
அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை 
ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1317
கொடிய பாவியேன் படும்பரி தாபம் 
குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது 
நெடிய காலமும் தாழ்த்தனை நினது 
நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ 
அடியர் தந்துயர் கண்டிடில் தரியார் 
ஐயர் என்பர்என் அளவஃ திலையோ 
ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1318
என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன் 
இறைவ நின்றனை இறைப்பொழு தேனும் 
உன்என் றால்என துரைமறுத் தெதிராய் 
உலக மாயையில் திலகமென் றுரைக்கும் 
மின்என் றால்இடை மடவியர் மயக்கில் 
வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால் 
உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
1319
அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர் 
அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன் 
கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும் 
கூலி யாளனைப் போல்எனை நினைத்தே 
நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும் 
நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும் 
ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே 
உனைஅ லால்எனை உடையவர் எவரே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 அர்ப்பித் திரங்கல் 
பொது 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1320
தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர் 
தாழ்வுண் டோ எனத் தருக்கொடும் இருந்தேன் 
எம்பி ரான்நினக் கேழையேன் அளவில் 
இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும் 
நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன் 
நம்பும் என்றனை வெம்பிடச் செயினும் 
செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே