1321
துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன் 
சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால் 
இட்ட நல்வழி அல்வழி எனவே 
எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ 
விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே 
வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ 
சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே    
1322
ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல் 
உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின் 
காட்டு கின்றனை காணுகின் றனன்நீ 
களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன் 
ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ் 
அகில கோடியும் அவ்வகை யானால் 
தீட்டும் அன்பருக் கன்பநின் தனது 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே    
1323
கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல் 
கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன் 
எண்ணி லாஇடை யூறடுத் ததனால் 
இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென் 
உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய் 
உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண் 
தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே    
1324
மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம் 
விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான் 
நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன் 
நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ 
இச்சை நன்றறி வாய்அருள் செய்யா 
திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே 
செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே    
1325
நாடுந் தாயினும் நல்லவன் நமது 
நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே 
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை 
வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண் 
பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் 
பண்பென் மட்டும்நின் பால்இலை போலும் 
தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே