1331
ஊழை யேமிக நொந்திடு வேனோ 
உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் 
பாழை யேபலன் தருவதென் றெண்ணிப் 
பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன் 
மாழை யேர்திரு மேனிஎம் பெருமான் 
மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந் 
தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே    
1332
ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும் 
யாவும் நீஎன எண்ணிய நாயேன் 
மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின் 
மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன் 
சான்று கொண்டது கண்டனை யேனும் 
தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை 
ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே    
1333
அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன் 
அரசன் தேசிகன் அன்புடைத் தேவன் 
இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற் 
றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன் 
செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர் 
செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல் 
எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே    
1334
தாய ராதியர் சலிப்புறு கிற்பார் 
தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார் 
நேய ராதியர் நேயம்விட் டகல்வார் 
நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன் 
தீய ராதியில் தீயன்என் றெனைநின் 
திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால் 
ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே   
1335
முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான் 
மோக வாரியின் மூழ்கின னேனும் 
அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம் 
அப்ப நின்அருள் அம்பியை நம்பி 
தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச் 
சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன் 
இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே