1341
பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த 
மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும் 
அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன் 
என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ    
1342
தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார் 
வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக் 
கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் 
ஈயில் சிறியேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ    
1343
புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே 
வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை 
முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான் 
என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ   
1344
அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே 
வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார் 
மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன் 
இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ  
1345
இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே 
அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன் 
எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான் 
எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ