1346
சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன் 
மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன் 
பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ் 
எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ   
1347
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத் 
தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன் 
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன் 
இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ  
1348
அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான் 
பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ 
மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் 
என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ   
1349
பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை 
உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை 
மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன் 
என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ   
டீயஉம--------------------------------------------------------------------------------


 முத்தி உபாயம் 
திருவொற்றியூர் 

வஞ்சித்துறை 
1350
ஒற்றி ஊரனைப் 
பற்றி நெஞ்சமே 
நிற்றி நீஅருள் 
பெற்றி சேரவே