1361
கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து 
தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி 
நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால் 
ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
1362
ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும் 
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக் 
கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே 
யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
1363
உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற 
தௌ;ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக் 
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே 
எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
1364
ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம் 
தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக் 
காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை 
யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
1365
மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின் 
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப் 
பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன் 
இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ