1371
கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன் 
கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன் 
பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப் 
பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே 
நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று 
நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ 
எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1372
வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் 
மாமணியே உனைநினையேன் வாளா நாளைக் 
கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் 
களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை 
நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால் 
நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால் 
எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1373
அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் 
ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச 
மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை 
வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை 
வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று 
வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா 
இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1374
பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண் 
பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ 
கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக் 
கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை 
ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி 
உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க 
இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1375
தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண் 
சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில் 
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி 
வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை 
உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி 
உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல் 
எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்