1376
விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே 
மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக் 
கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக் 
கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப் 
பொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப் 
புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட 
இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1377
அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன் 
ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன் 
மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல் 
வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச் 
செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ 
திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து 
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1378
அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை 
அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத் 
துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் 
தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன் 
வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ 
மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை 
இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
1379
தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத் 
தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன் 
கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக் 
குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ 
நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன் 
நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க் 
கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்    
டீயஉம--------------------------------------------------------------------------------


 உள்ளப் பஞ்சகம் 
பொது 

கட்டளைக் கலித்துறை 
1380
நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத் 
தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும் 
பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம் 
ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே