1386
கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே 
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே 
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே 
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே    
1387
அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற் 
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே 
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா 
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே    
1388
மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே 
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே 
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே 
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே    
1389
பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண் 
அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும் 
தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே 
மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே    
1390
திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத் 
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும் 
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை 
மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே