1391
உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப் 
பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும் 
அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ் 
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே    
1392
கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய் 
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் 
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே 
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1393
மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச் 
சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே 
அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே 
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே   
1394
காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச் 
சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே 
தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின் 
வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே    
1395
கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை 
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே 
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே 
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே