1396
நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப் 
போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம் 
பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற 
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே   
1397
கங்கைகொண் டோ ன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய் 
நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத் 
தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை 
மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே    
1398
சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின் 
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித் 
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள் 
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே    
1399
தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய் 
வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ 
எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு 
மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே    
1400
பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ 
முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர் 
கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே 
மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே