1401
பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச் 
செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ 
கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய் 
மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1402
இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம் 
தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய் 
நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான் 
மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1403
கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள் 
அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய் 
தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன் 
மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே   
1404
பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி 
தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற 
பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ 
மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே   
1405
காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி 
யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல் 
நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ 
மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே