1406
வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம் 
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால் 
ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே 
மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே    
1407
பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி 
விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் 
நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய் 
மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே   
1408
அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் 
தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே 
தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் 
மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே   
1409
ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண் 
சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில் 
நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே 
வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே    
1410
சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு 
கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று 
தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண் 
வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே