1411
நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் 
பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும் 
தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத 
வாயேர் சவுந்தர() மானே வடிவுடை மாணிக்கமே   
 ( ) சௌந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று தொவே  
1412
முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் 
ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை 
எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் 
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே    
1413
மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப் 
பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம் 
பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள் 
மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1414
சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் 
நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் 
தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் 
வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே    
1415
செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர் 
சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் 
துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை 
மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே