1421
வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே 
லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் 
யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே 
மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே    
1422
முத்தேவர் விண்ணன்() முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை 
எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம் 
செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா 
மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே   
 () விண்ணன் -இந்திரன் தொவே  
1423
திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள் 
கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே 
ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ் 
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே    
1424
வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன் 
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் 
காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் 
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே    
1425
சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப் 
போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் 
யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே 
வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே