1431
இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும் 
எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ 
கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த 
மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே    
1432
வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த 
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார் 
எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி 
மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே    
1433
விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி 
வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின் 
குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன் 
மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே    
1434
பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று 
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை 
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே 
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1435
சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை 
மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே 
தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே 
வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே