1436
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல் 
எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல் 
இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் 
மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே    
1437
எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே 
தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே 
செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே 
வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே    
1438
தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந் 
தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த 
இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம் 
மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே    
1439
அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க் 
கயிலேந்() தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல் 
குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த 
மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே    
 () கையிலேந்து எனற்பாலது கயிலேந்து எனப் போலியாயிற்று தொவே  
1440
செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான் 
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர் 
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே 
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே