1441
தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங் 
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே 
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே 
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே    
1442
சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம் 
பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி 
மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார் 
மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே    
1443
எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச் 
செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே 
வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே 
வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே    
1444
ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த 
சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே 
தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய் 
வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே    
1445
மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ 
அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம் 
முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி 
வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே