1446
கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே 
குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன் 
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ 
மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே    
1447
கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக் 
குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத் 
திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த 
மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே    
1448
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள் 
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் 
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால் 
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே    
1449
தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று 
வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன் 
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ 
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே    
1450
மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும் 
திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே 
விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு 
வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே