1451
என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும் 
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால் 
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய் 
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1452
துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள் 
இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க் 
கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால் 
வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே    
1453
சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின் 
பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய் 
சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம் 
மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே    
1454
சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் 
அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ 
நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் 
வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே    
1455
அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச் 
செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக் 
கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே 
வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே