1456
கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி 
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே 
எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட 
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே    
1457
கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த 
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே 
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே 
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே    
1458
மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள் 
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும் 
சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற 
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே    
1459
வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப் 
பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண 
பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய் 
வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே    
1460
மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த 
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே 
கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால் 
வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே