1461
ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே 
கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன் 
தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ் 
மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே    
1462
எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் 
சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே 
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே 
மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
1463
செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக் 
கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண் 
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை 
வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே    
1464
தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச் 
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே 
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு 
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே    
1465
நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ 
தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர் 
தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே 
வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே